மதுரை, ஏப். 21- குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குரு பெயர்ச்சி விழா அதிவிமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த முறை குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நாளை 22-ம் தேதி பெயர்ச்சியாகிறார். இதையொட்டி தமிழகத்தில் குரு பகவான் வீற்றிருக்கும் முக்கிய ஸ்தலங்களான ஆலங்குடி மற்றும் குருவித்துறையில் குரு பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு சித்திர ரத வல்லப பெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக இருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார். ஒவ்வொரு குருப்பெயர்ச்சி அன்றும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது முன்னிட்டு குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக 3 நாட்கள் நடைபெறும். இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து குரு பகவானைத் தரிசித்து செல்வார்கள்.
இந்த நிலையில் நேற்று 20-ம் தேதி வியாழக்கிழமை காலை 10.45 அளவில் லட்சார்ச்சனை தொடங்கியது. வரும் 22-ம் தேதி சனிக்கிழமை மதியம் 12 மணி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும். இரவு 9 மணி அளவில் யாகசாலை தொடங்கி 11.24 மணிக்குள் பரிகார மகா யாகம், மகாபூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. குருப்பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவேண்டும்.
விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாலமுருகன், தக்கார் இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். இதே போல் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் கோவிலிலும் குரு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தில் குரு பகவான் வீற்றிருக்கும் கோவில்களில் குரு பெயர்ச்சி விழா விமர்சையாக நாளை நடைபெறவுள்ளது.