திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று சித்திரை தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் தங்க கருடன், யாழி, கற்பக விருட்சம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதைத் தொடர்ந்து 7-ம் திருநாளான கடந்த திங்கட்கிழமை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். அதன் பிறகு ஆழ்வார் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை சென்றடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளி நள்ளிரவில் கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
தொடர்ந்து 8-ம் திருநாளான நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்க விலாஸ் மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் ரெங்கவிலாஸ் மண்டபத்திலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து சித்திரை தேர் அருகே வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.45 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தேருக்கு புறப்பட்டு 5.15 மணிக்கு சித்திரை தேர் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார். காலை 5.30 மணி முதல் 6.15 மணிக்குள் தேரில் நம்பெருமாள் எழுந்தருளினார்.
தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஸ்ரீரங்கா கோஷம் விண்ணதிர பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை முட்டியது.
கீழச்சித்திரை வீதியில் இருந்த புறப்பட்ட தேர் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதி ஆகிய நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து நிலையை சென்றடைந்தது. தேர் நிலைக்கு வந்த பின்னர் நம்பெருமாள் ரேவதி மண்டபம் சேர்ந்தார்.
தேரோட்டத்தை முன்னிட்டு போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவின் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இன்று (வியாழக்கிழமை) திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சியும், இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறும். நாளை (21-ம் தேதி) ஆளும் பல்லக்குடன் ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.