திருப்பதி, அக். 18- திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்றுகாலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்ப சுவாமி, நரசிம்ம அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகன வீதிஉலாவுக்கு முன்னால் வேதபண்டிதர்கள் வேத பாராயணம் செய்தபடியும், மேள,தாளம், பேண்டு வாத்தியம் முழங்க, பெண்கள் கோலாட்ட நடனமாடியும், பக்தி பாடல்களைப் பாடியும், கிருஷ்ணர், நரசிம்மர், காலிங்க நர்த்தன கிருஷ்ணர் போன்றும் வேடமணிந்து வந்தனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இதில் இடம்பெற்றன. இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது.