திருப்பதி, அக். 25- திருப்பதி கோவிலில் நடைபெற்ற 2 பிரம்மோற்சவ காலங்களில் ரூ. 47.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்து நாட்காட்டி முறைப்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிக மாதங்கள் வரும் ஆண்டு 2 பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை முதல் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது.
நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று முன்தினம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
இந்த ஆண்டு நடைபெற்ற 2 பிரம்மோற்சவ விழாக்களில் மொத்தம் 11 லட்சம் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்துள்ளனர். 57.64 லட்சம் லட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 4.29 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 47.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளது. இவ்வாறு தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.