திருமலை, அக். 22- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று காலை சூரியபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 15-ம்தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று முன்தினம் மாலை புஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மாடவீதியில் எழுந்தருளி பவனி வந்தார்.
பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று காலை மலையப்ப சுவாமி சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா, கோவிந்தா என பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து இரவு சந்திரபிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதிஉலா நடைபெற்றது.