திருப்பதி, அக். 01- புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக 45 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் வெகுவாக அதிகரித்து வருகின்றது. மேலும் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் வைகுண்டம் பியூ காம்ப்ளக்சில் இருந்து நேரடியாக இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 45 மணி நேரம் ஆகிறது. கூட்டம் நிரம்பி வழிவதால் சுமார் 7 கி.மீட்டர் நீள வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
இலவச தரிசனத்திற்கு டோக்கன் கிடைக்காத பக்தர்கள் திருப்பதி மலையில் உள்ள மண்டபங்களில் அவரவர் குடும்பங்களோடு தங்கியுள்ளனர். வாகன நிறுத்துமிடமும் நிரம்பி வழியும் நிலையில் இன்னும் 2 நாள்களுக்குக் கூட்டம் குறையாது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதியில் தங்கும் அறைகளும் நிரம்பியுள்ளதால் பக்தர்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர். திருமலையில் கூடியுள்ள பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளைத் தேவஸ்தான நிர்வாகம் செய்து வருகிறது.