திருமலை, செப். 24- திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் பெரிய சேஷ வாகனத்தில் தொடங்கி சின்ன சேஷ வாகனம், அன்னம், சிம்ம, முத்து பந்தல், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், பல்லக்கு என பல்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் இரவு முக்கிய வாகன சேவையான கருட சேவை கோலாகலமாக நடந்தது. மலயைப்ப சுவாமி தங்க, வைர, பச்சை, மரகதம் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மாடவீதிகளில் திரண்டிருந்த 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை த்ரேதா யுகத்தில் தனக்கு சேவை செய்த பக்தன் அனுமந்தனை வாகனமாக கொண்டு ராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் பவனி வந்தார். கிருஷ்ணர், ராமர், சீனிவாச பெருமாள் அனைவரும் தானே என்னும் விதமாக ராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சுவாமி வீதிஉலாவில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், பரதநாட்டியம், உள்பட பல்வேறு பாரம்பரிய நடனங்கள் ஆடியும், பல்வேறு சுவாமி வேடம் அணிந்தும் பங்கேற்றனர். நேற்று மாலை தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு உற்சவத்தில் மலையப்பசுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.