
திருவனந்தபுரம், மே. 01- யானைகளின் அணிவகுப்பு, மேள தாளங்களுடன் திருச்சூரில் பூரம் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.
கேரள மாநிலத்தில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்று திருச்சூர் பூரம் திருவிழா. இந்த விழாவில் நடைபெறும் யானைகளின் அணிவகுப்பு, வாண வேடிக்கை போன்றவை உலக பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டுக்கான பூரம் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 24-ம் தேதி திருச்சூர் பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில், திருவம்பாடி கிருஷ்ணர் கோவில்களில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து இதன் உபகோவில்களிலும் கொடியேற்றப்பட்டது. கடந்த வெள்ளியன்று பகவதி அம்மன், கிருஷ்ணர் கோவில்களில் யானைகளின் அணிவகுப்பு ஆடை ஆபரண அலங்காரம், முத்து மணி குடைகளின் கண்காட்சி மற்றும் மாதிரி வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் மதியம் நெய்தலைக்காவ் பகவதி அம்மன், யானை மீது எழுந்தருளி அருள்பாலித்தார். இதனை ஆயிரக்கணக்கானோர் வழிபட்டனர். பூரம் தினமான நேற்று காலை கணிமங்கலம் சாஸ்தா எழுந்தருளுடன் விழா கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து பகலில் யானைகளின் அணிவகுப்பு, மேள தாளங்கள் போன்றவை விமரிசையாக நடந்தது. மதியம் 15 யானைகள் முன்னிலையில் பரமேக்காவூரில் தேரோட்டம் நடந்தது. அதை தொடர்ந்து வான வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.