தூத்துக்குடி.அக்.11. ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 14ம் தேதி புரட்டாசி மஹாளய அமாவாசை அன்று முதல் முறையாக ஸ்ரீவாராஹி அம்மனுக்கு 2025 கிலோ கிழங்கு வகைகள் மஹா யாகம் நடக்கிறது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி- மஹா காலபைரவர் சித்தர் பீட ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில், ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, ஸ்ரீமஹா காலபைரவர், மங்களம் தரும் சனீஸ்வரர், குருமகாலிங்கேஸ்வரர், தியான ஆஞ்சநேயர், வீரணார் உள்ளிட்ட தெய்வங்கள் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். தென்தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பாக ஸ்ரீசித்தர் பீடத்தில் ஸ்ரீவாராஹி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வெற்றிகளை அள்ளித்தந்திடும் ஸ்ரீவாராஹி அம்மனை வாரம்தோறும் வணங்கினால் வேண்டும் வரம் யாவும் கிட்டும் என்பது ஐதீகமாகும். வரும் 14-ம் தேதி(சனிக்கிழமை) புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீவாராஹி அம்மனுக்கு முதல் முறையாக 2025 கிலோ கிழங்கு வகைகள் கொண்டு மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் 2025கிலோ கிழங்கு வகைகள் மஹா யாக வழிபாடுகள் காலை 9.30மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடுகளுடன் கோலாகலமாக துவங்குகிறது. காலை 9.50மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமமும், காலை 10மணிக்கு ஸ்ரீவாராஹி அம்மனுக்கு ஹோமமும் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து, பகல் 11மணிக்கு ஸ்ரீவாராஹி அம்மனுக்கு மிகவும் பிடித்தமான சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சீனிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சிறுகிழங்கு, பனங்கிழங்கு, ராசவள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் கேரட், பீட்ரூட், வாழைத்தண்டு, வாழைக்காய், முட்டைகோஸ், காலிபிளவர் போன்றவற்றுடன் பூமிக்கு அடியில் விளையும் அனைத்து வகையான பொருட்களும் என 2025 கிலோ கிழங்கு வகைகள் கொண்டு மஹா யாகம் நடக்கிறது.
மஹாயாக வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்கள் தங்களுக்கு பிடித்தமான கிழங்கு வகைகளை யாகத்திற்கு வழங்கியும், அன்னதானத்திற்கு தேவையான பொருட்களை வழங்கியும் ஸ்ரீவாராஹி அம்மனை வழிபடலாம்..தொடர்ந்து, மதியம் 12.30மணிக்கு ஸ்ரீவாராஹி அம்மன், ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரமும் மதியம் 12.50மணிக்கு தீபாரதனையும் நடக்கிறது. மதியம் 1மணிக்கு பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாலை 4.30மணிக்கு சிறப்பு வழிபாடுகள் நிறைவுறுதல் பூஜையும், மாலை 5மணிக்கு தீபாரதனையும் நடக்கிறது. தமிழகத்தில் பருவமழை நன்கு பெய்து பசுமை வளம் சிறக்க வேண்டியும், உலகமக்கள் கொடும் நோய்கள் இன்றி நலமாக வாழவேண்டியும் மற்றும் வாழ்வில் கடன்தொல்லைகள் நீங்கி இல்லத்தில் செல்வம் பெருகிடவும், கல்வி வளம் மேம்படவும், நல்ல அரசு வேலை கிடைக்கவும், நோய்கள், வழக்குகள் தீர்ந்திடவும் என அனைத்து மக்களும் நலம்பெற்றிடவும் வேண்டி நடைபெறும் மஹா யாகத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்திடுமாறு ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.