சங்கரன்கோவில், ஜூலை. 30- சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசாமி கோயில் அடித்தவசு திருவிழாவையொட்டி 9-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்துத் தேரை இழுத்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் இரவில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
9-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணியளவில் கோமதி அம்பாள் தேருக்கு எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து கோமதி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றதும் காலை 10.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கானோர் ரத வீதிகளில் நின்று கோமதி அம்மனை தரிசித்தனர். இதைத்தொடர்ந்து ஆடித்தவசுத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தவசு காட்சி இன்று 31-ம் தேதி நடைபெறுகிறது.