மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி அழகர்கோவிலில் இருந்து வரும் 3-ம் தேதி தங்கப்பல்லக்கில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்படுகிறார். வரும் 4-ம் தேதி மூன்றுமாவடியில் கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. மதுரை வரும் கள்ளழகர் வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா நாளை மே 1-ம் தேதி திங்கள்கிழமை முதல் நாள் திருவிழாவுடன் ஆரம்பமாகிறது. அன்று மாலை 6 மணிக்குமேல் 7 மணிக்குள் தோளுக்கினியான் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி திருவாராதனம் நடைபெறும். மறுநாள் மே 2-ம் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து மே 3-ம் தேதி கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளும் சுந்தரராஜ பெருமாள் தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்படுகிறார்.
அதை தொடர்ந்து பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி ஜமீன்தார் திருக்கண் மண்டபங்களில் எழுந்தருள்கிறார். மறுநாள் 4-ம் தேதி அதிகாலை சுந்தர்ராஜன்பட்டி மறவர் திருக்கண் மண்டபத்தில் இருந்து புறப்படும் கள்ளழகர், கடச்சனேந்தல், மூன்றுமாவடி, புதூர் மாரியம்மன் திருக்கோவில், ரிசர்வ்லைன் மாரியம்மன் திருக்கோவில், அவுட்போஸ்ட் மாரியம்மன் திருக்கோவில் வழியாக அம்பலக்காரர் மண்டபம் வந்து சேருகிறார். அதை தொடர்ந்து தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் பெருமாள் திருமஞ்சனமாகி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளியதும், திருவில்லிபுத்தூரில் இருந்து சூடிக் கொடுத்த நாச்சியார் அருள்மிகு ஆண்டாளுடைய திருமாலையை சாற்றி பக்தர்களுக்கு வெட்டிவேர் சப்பரத்தில் அருள்பாலிக்கிறார்.
அதை தொடர்ந்து வரும் 5-ம் தேதி காலை 2.30 மணியளவில் அருள்மிகு கருப்பண சுவாமி திருக்கோவிலுக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் வரும் கள்ளழகர், காலை 5.45 மணியில் இருந்து 6.12 மணிக்குள் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அதை தொடர்ந்து காலை 7,25 மணியளவில் அருள்மிகு வீரராகவ பெருமாளுக்கு மாலை சாத்துதல் நிகழ்வு நடைபெறுகிறது. அதை தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து புறப்படும் கள்ளழகர் ராமராயர் மண்டபம் செல்கிறார். அதை தொடர்ந்து வழிநெடுக அமைக்கப்பட்டுள்ள திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளும் கள்ளழகர் இரவு 9 மணியளவில் வண்டியூர் வீரராக பெருமாள் திருக்கோவிலை சென்றடைகிறார்.
மறுநாள் 6-ம் தேதி காலை 6 மணியளவில் திருமஞ்சனமாகி வண்டியூர் அருள்மிகு வீரராகவ பெருமாள் திருக்கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்படும் பெருமாள் காலை 11 மணியளவில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு திருமஞ்சனமாகி பிறகு கருட வாகனத்தில் பிரசன்னமாகி அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிற்பகல் 3.30 மணியளவில் அருள்மிகு அனுமார் கோவிலில் பிரசன்னமாகி இரவு 10 மணியளவில் இராமராயர் மண்டபத்தில் திருமஞ்சனமாகி அங்கு இரவு 12 மணி முதல் தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதை தொடர்ந்து 7-ம் தேதி காலை 6 மணியளவில் இராமராயர் மண்டபத்தில் மோகினி அவதாரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் பெருமான், பகல் 2 மணியளவில் திருமஞ்சனமாகி பின்னர் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். அதை தொடர்ந்து இரவு 11 மணியளவில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி மறுநாள் 8-ம் தேதி பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் அருள்மிகு கருப்பண சுவாமி கோவில் சன்னதியில் இருந்து அவுட்போஸ்ட் மாரியம்மன் கோவில், அம்பலக்காரர் மண்டபம், மூன்றுமாவடி ,மறவர் மண்டபம் வழியாக அழகர்மலைக்கு திரும்புகிறார்.
வரும் 9-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபத்தில் எழுந்தருளும் பெருமான், காலை 7 மணியளவில் கள்ளந்திரி சென்று சேர்ந்து பின்னர் 10.32 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் இருப்பிடம் சேர்கிறார். அதை தொடர்ந்து 10-ம் தேதி அழகர் திருக்கோவிலில் உற்சவ சாந்தி நடைபெறும்.