மதுரை, மார்ச். 29- மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கால அட்டவணையை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 5-ம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த திருவிழாவுக்கான கால அட்ட வணையை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது.
சித்திரை திருவிழாவில் 12 நாட்களும் அம்மன் சுவாமி பலவகை வாகனங்களில் எழுந் தருளி திருவீதி உலா வருவார். இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக 8-ம் நாள் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். அன்று மீனாட்சியம்மன் மதுரை நகரின் ஆட்சிப்பொறுப்பை ஏற்று சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பத்தாம் நாள் திருவிழாவான மே மாதம் 2 -ம் தேதி அன்று மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். மே 3 -ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும். அப்போது நான்கு மாசி வீதிகளில் சுவாமிகள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப் பார்கள்.
மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மே 05-ம் தேதி நிறைவடையும் நிலையில், தொடர்ந்து அழகர் கோவில் கள்ளழகர் கோயில் சார்பில் மே 04-ம் தேதி கள்ளழகர் எதிர்சேவை நடக்கிறது. இதையடுத்து மே 05 -ம் தேதி சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
சித்திரை திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் நான்கு ஆடி வீதிகளில் பந்தல் அமைக்கப்படும். மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை காண 6,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 20 இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், ஆடி வீதிகளில் குடிநீர் தொட்டி வைக்கவும் ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது.
40,000 லிட்டர் கொள்ளவு கொண்ட தண்ணீர் லாரிகளை நிறுத்தி வைக்க கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்காலிக மருத்துவ குழுக்கள் அமைக்கபடும் என்றும் மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.