மதுரை, ஏப். 30- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 7-ம் நாளான நேற்று தங்க சப்பரத்தில் பிச்சாடனர் கோலத்தில் சுந்தரேசுவரர் மீனாட்சி அம்மனுடன் வீதி உலா வந்து அருள் பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் 7-வது நாளான நேற்று காலை தங்க சப்பரத்தில் பிச்சாடனர் கோலத்தில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மனுடன் உலா வந்தார்.
இறைவனை மறந்த ரிஷிகளுக்கும், ரிஷிபத்தி னிகளுக்கும் உணர்த்தும் வகையில் பிச்சாடனர் கோலத்தில் சுவாமியும்- அம்பாளும் பிச்சை பாத்திரம் ஏந்தி வலம் வந்தனர். 4 மாசி வீதிகள் வழியாக பிச்சாடனர் கோலத்தில் வலம் வந்த சுவாமிகளுக்கு பக்தர்கள் பிச்சையளித்தனர். வீதி உலா முடிந்து மீண்டும் கோவிலுக்கு வந்த சுவாமி- அம்மன் சிவகங்கை ராஜா மண்டகப்படி, மீனாட்சி நாயக்கர் மண்டபங்களில் எழுந்தருளினர். அதை தொடர்ந்து இரவு நந்திகேசுவரர், யாழி வாகனத்தில் சுவாமி- அம்மன் 4 மாசி வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடத்தும் நிகழ்ச்சி இன்று (30-ம் தேதி) நடக்கிறது. இரவு 7.05 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
அப்போது மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி நவரத்தினத்தாலான செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூடப்படும். அதில் மீனாட்சி அம்மனிடம் இருந்த செங்கோல் அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ண னிடம் வழங்கப்படும். அவர் செங்கோலை பெற்று சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைப்பார்.
பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி 4 மாசிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. அன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் வடக்கு-மேற்கு ஆடி வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.