மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வரும் 21-ம் தேதி நடக்கிறது.
தமிழகத்தில் இரண்டாவது பெரிய நகரமான மதுரை திருவிழா நகரம் என்று அழைக்கப்படுகிறது. உலகில் வேறெங்கும் காண முடியாத அளவிற்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆண்டிற்கு 12 மாதங்களும் 10 நாட்களுக்கு குறையாமல் திருவிழா நடைபெறும்.
மேலும் மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவும், தெப்பத்திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. நேற்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
விழாவில் வருகிற 19-ம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், 20-ம் தேதி திக்விஜயமும் நடைபெறுகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும்.
அந்த திருக்கல்யாணத்தை காண்பதற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் 22-ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. 23-ம் தேதி தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
சித்திரை திருவிழாவில் சுவாமி வீதி உலா வரும் நேரங்களில் பக்தர்களால் சுவாமிக்கு உகந்த மாலைகளால் சாத்துப்படி செய்யலாம். ஆனால் கேந்தி பூ, மருதை வேர்கள் இணைத்து கட்டப்பட்ட மாலைகள் சாத்துப்படிக்கு ஏற்று கொள்ளப்பட மாட்டாது.
திருக்கல்யாணத்தன்று மூலஸ்தான அம்மன், சுவாமிக்கும், உற்சவர் அம்மன், சுவாமிக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் மட்டுமே பட்டு பரிவட்டங்கள் சாத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் குழுவினரும், கோவில் நிர்வாகமும் தீவிரமாக செய்து வருகிறார்கள்.