மதுரை, மே. 03- சித்திரை திருவிழாவையொட்டி அழகர்கோவிலில் இருந்து தங்கப் பல்லக்கில் மதுரைக்கு இன்று கள்ளழகர் புறப்படுகிறார். நாளை மூன்றுமாவடியில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் பிரசித்தி பெற்றது சித்திரை திருவிழாவாகும். இந்த திருவிழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. கள்ளழகருக்கு மங்கள இசை முழங்க, வேத மந்தி ரங்களுடன் காப்பு கட்டுதல் நடந்தது.
அதன் பின்னர் பல்லக்கில் கள்ளழகர் புறப்பாடாகி கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வந்தார். கோவிலின் கல்யாண சுந்தரவல்லி யானை முன்னே செல்ல, வர்ணக் குடை, சகல பரிவாரங்களுடன் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது விசேஷ பூஜைகள், நூபுர கங்கை தீர்த்தத்தினால் சர விளக்கு, தீபாராதனை நடந்தது.
கள்ளழகர் மனோரஞ்சிதப்பூ மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் அதே பரிவாரத்துடன் சுவாமி புறப்பாடாகி கோவிலுக்குள் இருப்பிடம் சேர்ந்தார். நேற்று மாலையிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
இன்று 3-ம் தேதி மாலையில் கள்ளழகர் மதுரைக்கு தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார். வழி நெடுகிலும் 450-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். 4-ம் தேதி மதுரை மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர் சேவை நடக்கிறது. 5-ம் தேதி (வெள்ளிக் கிழமை) அதிகாலையில் 5.45 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.
அதை தொடர்ந்து 6-ம் தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் காட்சி அளிக்கிறார். அன்று மதியம் கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தரும் நிகழ்வு நடைபெறுகிறது. அன்று இரவு மதிச்சியம் ராமராயர் மண்டகப்படியில் விடிய விடிய தசாவதார நிகழ்ச்சிகள் நடக்கிறது.
வரும் 7-ம் தேதி இரவு பூப்பல்லக்கு விழா நடக்கிறது. 8-ம் தேதி காலை அதே பரிவாரங்களுடன் கள்ளழகர் அழகர் கோவிலுக்கு புறப்பாடாகிறார். அன்றிரவு அப்பன் திருப்பதியில் திருவிழா நடைபெறுகிறது. 9-ம் தேதி காலையில் கள்ளந்தரி வழியாக கள்ளழகர் கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேருகிறார். 10-ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறு கிறது.
மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 39 தள்ளுவண்டி உண்டியல்கள் அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு சென்று திரும்புகின்றன. இதற்கான ஏற்பாடுகளை அழகர்கோவில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.