அயோத்தி, ஜன. 17- அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் கருவறையில் குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான சடங்கு பூஜைகள் நேற்று தொடங்கி உள்ளன.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும் 22-ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இந்நிலையில், கோவில் கருவறையில் குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான சடங்கு பூஜைகள் நேற்று தொடங்கின. 11 பூசாரிகள் இந்த சடங்குகளை செய்கிறார்கள். இந்த சடங்குகள் 21-ம் தேதி வரை நடைபெறும்.
இன்று ராமர் சிலையின் பரிசார் பிரவேசம் விழா நடைபெறுகிறது. அதன் பின்னர் நாளை 18-ம் தேதி தீர்த்த பூஜை, ஜல யாத்திரை, கந்தாதிவாஸ் ஆகிய பூஜைகள் நடைபெறுகின்றன.
வரும் 19-ம் தேதி அவுஷததிவாஸ், கேசரதிவாஸ், கிரிதாதிவாஸ் மற்றும் தன்யாதிவாஸ் ஆகிய சடங்குகள் நடைபெறுகின்றன. 20-ம் தேதி, சர்க்கரா திவாஸ், பலாதிவாஸ் மற்றும் புஷ்பதிவாஸ் போன்ற சடங்குகள் நடைபெறும்.
தொடர்ந்து 21-ம் தேதி மத்யதிவாஸ் மற்றும் ஷையாதிவாஸ் சடங்குகள் நடைபெறும். ஜனவரி 22-ம் தேதி, இறுதிக்கட்ட பூஜைகள் செய்யப்பட்டு, மதியம் 12.20 மணிக்கு சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.