அயோத்தி, ஜன. 17- உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 23-ம் தேதி முதல் பொதுமக்கள் பகவான் ராமரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அறிவித்துள்ளது.
2019-ல் வெளியான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயில் வளாகத்தில் 2020-ல் கோயில் கட்டுமானத்துக்கான அடிக்கல் பணிகள் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். கோயில் கட்டுமான பணிகள் முழுமை பெற்றுள்ள நிலையில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், சாதுக்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர். அதற்காக பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் முடிந்த மறுநாளே பொதுமக்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.