நெல்லை, நெல்லை டவுன் நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோவில் நாயன்மாா்களால் பாடப்பட்ட பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதத்திலும் திருவிழாக்கள் நடைபெறும்.
அதில் குறிப்பாக சுவாமிக்கு ஆனித் தேரோட்டமும், அம்பாளுக்கு ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 29-ம் தேதி அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் தினமும் காலை, மாலை வேளைகளில் காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம், பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி -அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக நெல்லை கோவிந்தராஜா் நெல்லையப்பரை ஆயிரங்கால் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தாா்.
அப்போது மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாத பூஜை நடைபெற்றது. விழா மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி -அம்பாள் காப்பு கட்டும் நிகழ்ச்சி, மாலை மாற்றும் வைபவம், பாலும், பழமும் கொடுத்தல் என சடங்குகள் நடைபெற்றன.
அதன் பின்னர் சுவாமி நெல்லையப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரைவார்த்து கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி-அம்பாள் ஆகியோருக்கு புது வஸ்திரங்கள் அணிவித்த பின் திருமாங்கல்ய தாரண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து சப்தபதி போன்றவை நடைபெற்று வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவா மூா்த்திகள் திராவிட வேதம் பாட மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் பக்தர் பேரவை சார்பில் திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து நேற்று முதல் 3 நாட்களுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.அதனை தொடா்ந்து சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.