திருவண்ணாமலை, மே. 03- திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் நாளை தொடங்குகிறது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சித்ரா பவுர்ணமி நாளை 4-ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 11.59 மணிக்கு தொடங்கி மறுநாள் 5-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் 5-ம் தேதி பவுர்ணமி கிரிவல செல்ல உகந்த நாள் என்றும், அன்றைய நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.