சென்னை : ஈஸ்டர் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாள் உயிர்தெழுந்த தினமாக ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
வாணவேடிக்கை மற்றும் மின்னொளி அலங்காரத்துடன் ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. இதனைக் கண்ட மக்கள் மனமுருகி பிரார்த்தனை மேற்கொண்டனர். அதே போல ஈஸ்டர் திருநாளையொட்டி தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரான் உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டது. சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தூய சகாய அன்னை தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பாறையை உடைத்துக் கொண்டு சிலுவை கொடியை கையில் தாங்கியபடி இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் இடைகாட்டூரில் உள்ள இடைகாட்டூர் திருதல ஆலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. இதைத் தொடர்ந்து மெழுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். இதேபோல் மானாமதுரை குழந்தை தெரசாள் ஆலயத்தின் வளாகத்தில் பங்கு தந்தை பாஸ்டின் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.