மதுரை, மே. 01- சித்திரை திருவி்ழாவின் முக்கிய நாளான இன்று திக் விஜயம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நாளை மதுரை அரசாளும் மீனாட்சிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தன. அதை தொடர்ந்து சித்திரை திருவிழா நடக்கும் நாட்களில் சுவாமி, அம்பாள் சகிதம் தினந்தோறும் காலை, இரவு ஆகிய 2 வேளைகளிலும் கற்பக விருட்சம், பூதம், வெள்ளி சிம்மாசனம், தங்க சப்பரம், ரிஷபம், மரவர்ண சப்பரம், இந்திர விமானம் உள்பட பல்வேறு வாகனங்களில், 4 மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அதை தொடர்ந்து நேற்று 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீனாட்சி பட்டாபிஷேகம் நடந்தது. இன்று மே 1-ம் தேதி(திங்கட்கிழமை) திக் விஜயம் நடைபெறுகிறது. நாளை 2-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இரவு யானை வாகனம், புஷ்ப பல்லக்கில் சுவாமிகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். வரும் 3-ம் தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்று மாலை சுவாமிகள் சப்தவர்ண சப்பரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். வரும் 4-ம் தேதி(வியாழக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகிறது.