அரோகரா கோஷத்துடன் திரளான பக்தர்கள் தரிசனம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று முருகப் பெருமான், தெய்வானை திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர். இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பங்குனி பெரு விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை தினமும் தங்கமயில் வாகனம், வெள்ளி யானை, தங்க குதிரை, பச்சைக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவில் 11-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடை பெற்றது. முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது. முன்னதாக உற்சவர் சன்னதியில் சுவாமி-அம்பாளுக்கு அதிகாலையில் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர்.
அதே சமயத்தில் மதுரையிலிருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண நிகழ்ச்சிக்காக புறப்பாடாகி மூலக்கரையில் உள்ள சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு முருகப்பெருமான் எதிர்கொண்டு வரவேற்றார். தொடர்ந்து சுவாமிகள் அமைக்கப்பட்டிருந்த பந்தல்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருக்கல்யாண வைபவத்தில் கோவிலுக்குள் உள்ள ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நடை பெற்றது. அதனை தொடர்ந்து கோவில் ஆறுகால் மண்டபத்தில் சொக்கநாதருடன் பிரியாவிடை-மீனாட்சி ஆகியோர் எழுந்தருளினர்.
அங்கு திருமண கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். மேள தாளங்கள் முழங்க 12.30 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அப்போது முருகப் பெருமான் சார்பில் தெய்வானைக்கு மங்கள நாண் அணிவிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சாமி கும்பிட்டனர்.
கோவில் சஷ்டி மண்ட பம், வள்ளி தேவசேனா திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் மணக் கோலத்தில் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் விடை பெறுதல் நிகழ்ச்சி நடை பெற்று மதுரை கோவிலுக்கு புறப்பாடாகினர்.
பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (9-ம் தேதி) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.