பழனி, மார்ச். 23-
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவி்ழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 3-ம் தேதி திருக்கல்யாணமும், 4-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரர்களை வென்றபின் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளன்று தெய்வானையை முருகன் திருமணம் செய்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
மேலும் கோடைவெயில் தொடங்கும் பங்குனி மாதத்தில் முருகப் பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பல லட்சம் பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்த காவடி எடுத்து வந்துஅபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும்.
சிறப்பு வாய்ந்த இத்திருவிழா வருகிற 29-ம் தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் மலைக்கோவிலில் உச்சிகாலத்தில் காப்பு கட்டு நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி தினசரி தந்தப்பல்லக்கில், முத்துக் குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளியாலான காமதேனு, ஆட்டுக்கிடா, யானை மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
திருவிழாவின் 6-ம் நாளான வருகிற 3-ம் தேதி முத்துக் குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம், வெள்ளிரதத்தில் வீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 4-ம் தேதி மாலை கிரிவீதியில் நடைபெறுகிறது. 7-ம் தேதி கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.