மதுரை, மே. 04- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹரஹர சங்கர, ஜெய ஜெய சங்கர கோஷங்களை எழுப்பி தேரை வடம்பிடித்து இழுத்தனர். 4 மாசி வீதிகளிலும் திரண்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தை ஒட்டி நகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழாக்கள் கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி இன்று 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை என இருவேளை சுவாமி புறப்பாடு மாசி வீதிகளில் நடைபெற்று வந்தது. இதில் எட்டாம் நாள் திருவிழாவாக மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. அடுத்த நாள் மே 1-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திக்விஜயம் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் மே 2-ல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள் திருமண வைபோகத்தின் போது தங்கள் திருமாங்கல்யத்தை புதுப்பித்து கட்டி கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. பிரியாவிடை, சுந்தரேசுவரர் பெரிய தேரிலும் மீனாட்சி அம்மன் தனித்தனி தேரிலும் எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
12-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர பூஜையும் நடைபெறுகின்றன. அத்துடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது.
இந்த நிலையில் அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு நேற்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் புறப்படுகிறார். வழிநெடுக உள்ள சுமார் 450 மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகரை, மதுரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை இன்று நடக்கிறது. சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக நாளை (5-ம் தேதி) அதிகாலையில், தங்கக்குதிரையில் வீற்றிருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.