சென்னை, ஜூலை. 22- தமிழ் மாதங்களில் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுவது ஆடி மாதமாகும். ஆடி மாதங்களில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதில் ஆலயங்களில் கூழ்வார்த்தல், நேர்த்திக் கடன் செலுத்துதல் உள் ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்.
நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலையில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதே போல் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில், ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் கோவில், மறவர் சாவடி தசகாளியம்மன் கோவில், முடக்கு சாலை காளியம்மன் கோவில், சொக்கலிங்க நகர் சந்தன மாரியம்மன் கோவில், பழங்காநத்தம் நேரு நகர் அங்காள ஈஸ்வரி கோவில், புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அழகர்கோவில் நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவிலில் அம்மன் பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலிலுக்கு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி சங்கரன்கோவில், திருவேங்கடம் தூத்துக்குடி, விளாத்தி குளம், கோவில்பட்டி போன்ற பல ஊர்களில் இருந்தும் அதிக அளவிலான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், அம்மனுக்கு தீச்சட்டி, அங்கப்பிரதட்சணம், பால்குடம், ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டில், மாவிளக்கு போன்ற நேர்த்திக்கடனை எடுத்து செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில், காரைக்குடி கொப்புடையம்மன் கோவில், மடப்புரம் காளியம்மன் கோவில், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.