திருமலை, செப். 04- திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவத்தையொட்டி வரும் 12-ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்தாண்டு பிரம்மோற்சவம் வரும் 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி 12-ம்தேதி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மை பணி) நடைபெறுகிறது. இதனையொட்டி அன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது. இப்பணி முடிந்ததும் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், பிரம்மோற்சவத்தன்று தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் பல்வேறு வாகனங்களில் சேவை நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவத்தின் முதல் நாளான 18-ம் தேதி மாலை 6.15 மணிக்கு மீனம் லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறும். அன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
19-ம்தேதி காலை சின்ன சேஷ வாகனம், மதியம் ஒரு மணி முதல் 3 வரை திருமஞ்சனம் இரவு அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். 20-ம்தேதி காலை சிம்ம வாகனத்திலும், அன்று இரவு முத்துபந்தல் வாகனத்திலும், 21-ம்தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், அன்று இரவு சர்வபூபால வாகனத்திலும், 22-ம்தேதி காலை மோகினி அவதாரம், இரவு கருட சேவையும், 23-ம் தேதி காலை தங்க தேர், அனுமந்த வாகனத்திலும், அன்று இரவு கஜ வாகனத்தில் சுவாமி உலா வந்து அருள்பாலிக்க உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, 24-ம்தேதி காலை சூர்யபிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும், 25-ம் தேதி காலை ரத உற்சவம் மற்றும் இரவு குதிரை வாகனத்திலும், 26-ம் தேதி பல்லக்கு உற்சவம், 6 மணி முதல் 9 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.