திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்காக ரூ. 300 தரிசன டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி 23-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்காக நேற்று காலை 10 மணிக்கு தேவஸ்தான ஆன்லைன் முகவரி மூலம் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. தினமும் 25,000 டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கான 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கான 20 ஆயிரம் டிக்கெட்டுகள் நேற்று மதியம் 3 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதனை பெற்றுக் கொண்ட பக்தர்களும், ரூ.300 டிக்கெட் வாங்கிய பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், 10 நாட்கள் திருமலையில் தங்கும் விடுதிகளுக்கான டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
மேலும் தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு இன்று வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பக்தர்கள் யாரும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.