சென்னை, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக திருச்சி மலைக்கோட்டை, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், கோவை புளியங்குளம் பெரிய முந்தி விநாயகர், கும்பகோணம் திருவலஞ்சுழி சுவேத விநாயகர், சென்னை பெசன்ட் நகரில் உள்ள வரசித்தி விநாயகர் கோயில் உட்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
அதுமட்டுமின்றி, சென்னை புரசைவாக்கம், பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
மேலும் வீடுகளில் வைத்து பூஜை செய்வதற்காக ரூ. 50 முதல் ரூ.500 வரையிலான சிறிய விநாயகர் சிலைகளையும், களிமண் விநாயகர் சிலைகளும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அத்துடன் விநாயகருக்கு மேல் வைப்பதற்கான சிறியஅளவிலான குடைகளையும் விரும்பி வாங்கிச் சென்றனர். வீடுகள் மற்றும் கடைகளில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொறி, பழங்கள் ஆகியவற்றை வைத்து மக்கள் வழிபட்டனர்.