திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரினத்திற்காக 4.23 லட்சம் இலவச டிக்கெட்டுகள் 9 இடங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இது குறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது :-
வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 23-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. பக்தர்கள் சிரமம் இன்றி விரைவாக தரிசனம் செய்வதற்காக 2.25 லட்சம் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
சாதாரண பக்தர்களும் வைகுண்ட வாசல் வழியாக சுவாமியை தரிசிக்க டிசம்பர் மாதம் 22-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை 10 நாட்களுக்கு 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 இலவச தரிசன டிக்கெட் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 மையங்களில் வழங்கப்பட உள்ளது.
காலை 6 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நித்திய அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 7 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளது.
பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார், தன்னார்வலர்களை பணியில் ஈடுபடுத்த உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.