திருப்பதி, பிப். 17- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா நேற்று நடந்தது. இதனையொட்டி ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளினார்.
இந்த விழாவை காண நேற்று முன்தினம் முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்திருந்தனர். சாமி வீதி உலாவை காண கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் 4 மாட வீதிகளில் பக்தர்கள் காத்திருந்தனர்.
நேற்று அதிகாலை 5-30 மணிக்கு ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் 4 மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மாட வீதிகளில் இருந்த பக்தர்கள் கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்து கோவிந்தா கோவிந்தா என விண்ணைமுட்டும் அளவுக்கு பக்தி பரவ சத்துடன் கோஷமிட்டனர்.
வாகன ஊர்வலத்தின் முன்பாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷம் வாகனத்திலும், 11 முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும் 1 முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும் 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடந்தது. அதை தொடர்ந்து கல்பவிருட்சம் வாகனம், சர்வ பூபால வாகனம், சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் உலா வந்தார்.
ரதசப்தமி விழாவை காண வந்த பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், பால், மோர் உள்ளிட்டவை தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டன. சுகாதார துறை சார்பில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.
மேலும் நடமாடும் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீஸ் சூப்பிரண்டு மலிகா கார்க் தலைமையில் 650 போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் காட்சியளிப்பது பரவசத்தை ஏற்படுத்தியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.