திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 1.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு கோவில் அடைக்கப்பட்ட நிலையில் சற்று நேரத்தில் மீண்டும் நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அலங்கரிக்கப்பட்ட சொர்க்கவாசலில் எழுந்தருளினார்.
அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. உற்சவருடன் சேர்ந்து தேவஸ்தான ஜீயர்கள் அறங்காவலர் குழு தலைவர், நிர்வாக அதிகாரி, தலைமை அர்ச்சகர் ஆகியோர் சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர்.
தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள், மிக முக்கிய பிரமுகர்கள், பிரமுகர்கள் ஆகியோர் வி.ஐ.பி. தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர். காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர்.
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் முழுவதுமாக 10 டன் எடையுள்ள மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவில் முழுவதும் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இதனை பக்தர்கள் மெய் மறந்து கண்டு ரசித்தனர்.