திருப்பதி, நவ. 19- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர புஷ்ப யாகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த புஷ்ப யாகம் 7 டன் பூக்களால் 4 மணி நேரம் நடைபெறுகிறது.
புஷ்ப யாகத்தின் போது கோவிலில் ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி பூதேவி உற்சவர்களுக்கு சம்பங்கி மண்டபத்தில் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதில் பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இன்று மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை புஷ்பயாகம் நடத்தப்படுகிறது. இதற்காக 7 டன் வரை பலவிதமான பூக்கள் கொண்டு வரப்படுகிறது. மாலையில் சகஸ்ரதீப அலங்கார சேவை முடிந்து ஏழுமலையான் கோவிலின் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இதையொட்டி நேற்று மாலை அங்குரார்ப்பணம் நடைபெற்றது.
இந்த நிலையில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பஞ்சமி தீர்த்தத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் இருந்து சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டது.மேலும், புஷ்ப யாகத்தையொட்டி இன்று (ஞாயிறு) கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரமோற்சவம் ஆகியன ரத்து செய்யப்பட்டுள்ளது. தோமாலை மற்றும் அர்ச்சனை சேவைகள் பக்தர்கள் இல்லாமல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.