திருமலை, அக். 21- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவம் தொடங்கியது முதல் பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், சிம்மம், முத்துப்பந்தல், கற்பக விருட்சம் உள்ளிட்ட வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்தார்.
பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று முன்தினம் இரவு முக்கிய நிகழ்வான கருடசேவை நடந்தது. இதில் மலையப்ப சுவாமி தங்க, வைர, பச்சை, மரகதம் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கருடசேவையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பல்வேறு சுவாமி வேடங்கள் தரித்து நடனமாடி சென்றனர். தொடர்ந்து மாலை மாலை தங்க ரதத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். அதை தொடர்ந்து இரவு கஜ(யானை) வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.