திருமலை, அக். 15- திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று 15-ம் தேதி இரவு கோலாகலமாக தொடங்குகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடத்தப்படுகிறது. இதில் ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரைவருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல், நவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகு கோலாகலமாக நடைபெறுகிறது.
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவினையொட்டி, நேற்று ஏழுமலையான் கோயிலில் அங்குரார்ப்பண நிகழ்ச்சிகள் வைகானச ஆகம விதிகளின்படி நடத்தப்பட்டது. மாலை விஸ்வகேசவர் என்றழைக்கப்படும் ஏழுமலையானின் சேனாதிபதி 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பிரம்மோற்சவ ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதனை தொடர்ந்து வரும் 22-ம் தேதி வரை காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடைபெற உள்ளன. 23-ம் தேதி காலை 6 மணிக்கு சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது.