திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களின் வசதிக்காக ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கருட சேவையை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது :-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவம் வருகிற 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி நிறைவு பெறுகிறது. இதில் முக்கிய வாகன சேவையான கருட சேவை 19-ம் தேதியும், 21-ம் தேதி புஷ்பக விமானம், 22-ம் தேதி தங்க ரதம், 23-ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.
கருட சேவை வழக்கமாக இரவு 7 மணிக்கு தொடங்கப்படும். ஆனால் அதனை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தொடங்கினால் காலை முதல் நான்கு மாட வீதியில் காத்திருக்கும் பக்தர்களை விரைவில் சாமி தரிசனம் செய்து வைக்க முடியும். இது தொடர்பாக கோவில் அர்ச்சகர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அவர்களும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு எப்பொழுது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர். இது குறித்து மீண்டும் ஒரு முறை அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அர்ச்சகர்களுடன் ஆலோசித்து கருட சேவை மட்டும் மாலை 6.15-க்கு அல்லது 6.30 மணிக்கே தொடங்குவது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.