திருப்பதி, செப். 27- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று தீர்த்தவாரி நிகழ்வுடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் குறைந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ நாட்களில் ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் காலை ஸ்ரீதேவி பூதேவி சமேதமாக ஏழுமலையான் பிரம்மாண்ட தேரில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நேற்று முன்தினம் இரவு அஸ்வ வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் பவனி வந்தார். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து இருந்த கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகள் செய்து பக்தர்களை பரவசப்படுத்தினர்.
பிரம்மோற்சவ விழா நிறைவு நாளான நேற்று காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் ஏழுமலையான் சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட உற்சவமூர்த்திகள் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க தீர்த்தவாரி நடைபெறும் புஷ்கரணிக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு சந்தன பொடிகள் மூலம் தீர்த்தவாரி நடந்தது.
பின்னர் உற்சவமூர்த்திகள் கோவில் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து மஹா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. பிறகு புஷ்கரணியில் நீராட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கோவில் குளத்தில் அருகே காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் நீராடினர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க புஷ்கரணியை சுற்றிலும் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர். அதை தொடர்ந்து நேற்று இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.
இந்த ஆண்டு 2 பிரமோற்சவம் உள்ளதால் அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.