திருச்செந்தூர், மே. 18- திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற 2-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இது குறித்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா வருகிற 2-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. முன்னதாக வைகாசி விசாக வசந்த திருவிழா வருகிற 24-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் நாள்தோறும் பகலில் சுவாமி ஜெயந்தி நாதர் தங்கச்சப்பரத்தில் கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு வைத்து மாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி, கிரிவீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் சேர்கிறார்.
10-ம் நாளான வருகிற 2-ம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதர் கோவிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடை பெறுகிறது.
பின்னர் மகா தீபாராதனைக்குப் பின் தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோவில் சேர்கிறார். இதே போல வைகாசி விசாகத் திருவிழாவிற்கு முதல் நாளான வருகிற 1-ம் தேதி மற்றும் 3-ம் தேதி பக்தர்கள் வசதிக்காக கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.