மதுரை, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.
முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதம் 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர்.
அங்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை முன்னிலையில் தர்பை புல், மாவிலை கொண்டு அலங்கரிக்கப்பட்ட கொடிகம்பத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர்.
தீபத்திருவிழாவை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில், வெள்ளி பூதவாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12-ம் தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் . தொடர்ந்து 13-ம் தேதி காலையில் கார்த்திகை தேரோட்டமும், மாலையில் கோயிலில் பால தீபம் ஏற்றப்பட்டு மலைமேல் மகாதீபம் ஏற்றப்படும்.