தஞ்சாவூர், ஏப். 18- தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு இன்று (17ம் தேதி) கொடியேற்றத்துடன் 18 நாட்கள் விழா நேற்று தொடங்கியது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியநாயகி உடனுறை பெருவுடையார் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு விழாவிற்காக, தஞ்சாவூர் பெரியகோயிலில் சந்திரசேகரர் பஞ்சமூர்த்திகளுடன் கோயிலுக்குள்ள புறப்பாடாகி நேற்று (17ம் தேதி) காலை கொடியேற்றப்பட்டது. இன்று 18ம் தேதி காலை பல்லக்கிலும், மாலை சிம்ம வாகனத்திலும் விநாயகர் புறப்பாடு நடைபெறுகிறது.
19ம் தேதி மாலை மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடு, 20ம் தேதி காலை விநாயகருக்கு சந்தனக்காப்பும், மாலை மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் சுவாமிகள் புறப்பாடும் நடைபெறுகிறது. 21ம் தேதி காலை சுப்பிரமணியர் பல்லக்கிலும், மாலை வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடும், 22ம் தேதி சுப்பிரமணியருக்கு சந்தனகாப்பு அலங்காரம், மாலை சைவ சமயாச்சாரியர் நால்வர் புறப்பாடு நடக்கிறது.
23ம் தேதி காலை நால்வர் பல்லக்கில் கோவிலுக்குள் புறப்பாடு மற்றும் சந்திரசேகரர் பட்டமும், மாலை சூரிய பிரபையில் சந்திரசேகரர் சுவாமி புறப்பாடும், 24ம் தேதி மாலை சந்திர பிரபையில் சந்திரசேகரர் புறப்பாடும், 25ம் தேதி மாலை தியாகராஜ சுவாமி பிரகாரத்தில் பிரதட்சணமாகி வசந்த மண்டபத்தில் பிரவேசம், செங்கோல் வைபவம், 26ம் தேதி மாலை சந்திரசேகரர் முத்துப்பல்லக்கில் புறப்பாடு, 27ம் தேதி மாலை பூதவாகனத்தில் சந்திரசேகரர் புறப்பாடு, 28ம் தேதி வெள்ளியானை வாகனத்தில் சந்திரசேகரர் புறப்பாடு, 29ம் தேதி காலை சந்திரசேகரர் வெண்ணெய்தாழி அலங்காரமும், மாலை வெள்ளி யானை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், ஓலைச்சப்பரத்தில் சந்திரசேகரர் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.
30ம் தேதி மாலை சந்திரசேகரர் கைலாசபர்வத வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. மே.1ம் தேதி தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், அன்று காலை 5 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், ஸ்கந்தர், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சுவாமிகள், சண்டிகேஸ்வரர், ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்காரத்தில் தேருக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு, காலை 6 மணிக்கு மேல் தியாகராஜசுவாமி தேரில் எழுந்தருளிய நிலையில் திருதேரோட்டம் நடைபெறுகிறது.
2ம் தேதி மாலை குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் புறப்பாடு, 3ம் தேதி காலை தியாகராஜர் பந்தல் காட்சியுடன் யதாஸ்தான பிரவேசமும், மாலை நடராஜர் வெள்ளை சாத்தி புறப்பாடு நடைபெறுகிறது. 4ம் தேதி சிவகங்கை குளித்தில் தீர்த்தவாரியுடன் கொடியிக்கத்துடன் 18 நாள் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அரண்மனை தேஸ்வதான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் பாலசுப்பரமணியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.