சென்னை, வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு கோவில்களில் நடைபாதைகளில் கயிற்றால் ஆன விரிப்புகள் அமைக்கப்பட உள்ளதாகவும், முதல்கட்டமாக 48 முதுநிலை கோவில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கப்படவுள்ளதாகவும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தால், கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கயிற்றால் ஆன விரிப்புகளைப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளோம். மேலும், தமிழகத்தில் அதிகமான அளவில் பக்தர்கள் வருகை தரும் முதல்கட்டமாக 48 முதுநிலை திருக்கோயில்களுக்கு இன்று முதல் இலவச நீர்மோர் வழங்கப்பட உள்ளது. அதன்படி, இன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவர். எனவேதான், வெயிலின் தாக்கம் தொடங்குவதற்கு முன்பாக இந்த திட்டத்தை செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் அனைத்து மண்டலங்களிலும் உள்ள திருக்கோவில்களில் உழவாரப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கான உபகரணங்கள், இதில் ஈடுபடுபவர்களுக்கான உணவு உள்ளிட்டவைகள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளன.
உலக முருகர் பக்தர்கள் மாநாட்டை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வரும் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் பழநியில், உலக முருகர் பக்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கான பணிகளில் இந்துசமய அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சோளிங்கரில் திருக்கோவில் ஒன்றுக்கு அமைக்கப்பட்ட ரோப் கார் மூலம் பயனடைந்த பக்தர்கள் முதல்வரை தொடர்ந்து பராட்டி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.