திருச்சி, அக். 19- ஐப்பசி துலா மாத பிறப்பையொட்டி திருச்சி அம்மா மண்டபம் காவிரியிலிருந்து தங்க குடத்தில் யானை மீது வைத்து புனித நீர் எடுத்து வந்து நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
துலா மாதம் என்று அழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் காவிரி புனிதமாவதாகவும், ஐப்பசி மாதத்தில் ஒரு நாள் நீராடி அரங்கனை தரிசனம் செய்தால் காசியில் வாசம் செய்து பல புண்ணிய செயல்கள் செய்ததற்கு சமம் என்பது ஐதீகம். இதையொட்டி காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவார்கள்.
வழக்கமாக மற்ற மாதங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தான் கோவிலுக்கு புனித நீர் கொண்டு வரப்படும். ஆனால் ஐப்பசி மாதம் மட்டும் காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தினமும் காலை புனித நீர் தங்க குடத்தில் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக ரங்கநாதர் கோவிலுக்கு கொண்டு வரப்படும். அந்த புனித நீர் நம்பெருமாள் திருவாராதனம் மற்றும் திருமஞ்சனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
அதன்படி நேற்று ஐப்பசி துலா மாத பிறப்பையொட்டி நேற்று அதிகாலை 5.45 மணிக்கு காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்தும், மேலும் வெள்ளி குடங்களில் புனித நீர் எடுக்கப்பட்டும் மேளதாளங்கள் முழங்க அர்ச்சகர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
இதையொட்டி நம்பெருமாள் தங்கத்தால் ஆன பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை 10 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, 10.30 மணிக்கு சந்தனு மண்டபத்தை வந்தடைந்தார். காலை 11 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார்.
இதைத் தொடர்ந்து மாலை சந்தனுமண்டபத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு மூலஸ்தானத்தை சென்றடைந்தார். துலா மாதத்தில் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்க பாத்திரத்தில் நடைபெறும். மேலும் மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள் மற்றும் தாயார் தங்க ஆபரணங்கள், சாலக்கிராம மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.