திருச்சி, ஏப். 19- தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலங்களில் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் முதன்மையானதாக திகழ்கிறது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பூச்சொரிதல், சித்திரை தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
சகல சவுபாக்கியங்களும் கிடைக்க அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடந்தோறும் மாசி கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை இருப்பது இந்த கோவிலின் தனிப்பெரும் சிறப்பாகும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 10-ம் திருநாளான நேற்று சிகர நிகழ்ச்சியாக சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தையொட்டி திருச்சியில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி மற்றும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை தலையில் சுமந்து தாரை, தப்பட்டைகள் முழங்க நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை சமயபுரத்திற்கு ஊர்வலமாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் சமயபுரம் முழுவதும் பக்தர்கள் தலைகளாகவே காணப்பட்டது.
தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையத்தை அடைந்தது. அப்போது தேரில் எழுந்தருளிய உற்சவர் மாரியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.
11-ம் திருநாளான இன்று அம்மன் வெள்ளிக்காமதேனு வாகனத்திலும், 12-ம் திருநாளன்று முத்துப்பல்லக்கிலும் வீதியுலா நடக்கிறது. விழாவின் 13-ம் நாளான 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 12 மணிக்கு மேல் பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார். மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி இரவு 8 மணிக்கு தெப்போற்சவம் நடைபெறுகிறது.
இந்த சித்திரை தேர்த்திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு இருந்தன. தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற்பார்வையில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.