திருவனந்தபுரம், சபரிமலையில் படி பூஜை நடத்தும் போது மழையில் நனையாமல் இருப்பதற்காக 18-ம் படிக்கு மேல் கண்ணாடியால் ஆன தானியங்கி மேற்கூரை அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிக முக்கிய பூஜைகளில் குறிப்பிடத்தக்கது படி பூஜை ஆகும். படி பூஜை நடைபெறும் நேரத்தில் பக்தர்கள் 18-ம் படி ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். மழை நேரங்களில் படி பூஜை நடத்துவதற்கு பெரும் சிரமமாக இருந்தது.
இதனால் 18-ம் படிக்கும் மேல் கண்ணாடியால் ஆன தானியங்கி கூரை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. ரூ. 70 லட்சம் செலவில் ஐதராபாத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இந்தக் கூரையை அமைக்க முன்வந்தது. கடந்த வருடம் இதற்கான பணிகள் தொடங்கின. தற்போது இந்த தானியங்கி கூரை அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
18-ம்படிக்கு இரு புறங்களிலும் கருங்கல் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படாத நேரங்களில் இந்த மேற்கூரையை இரு புறங்களிலும் மடக்கி வைக்கலாம். மண்டல சீசன் தொடங்குவதற்கு முன் பணிகளை முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.