திருவனந்தபுரம், தொடர்மழை காரணமாக சபரிமலைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்துவருவதை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சபரிமலையில் மழை பெய்து வருகிறது.
இருந்தபோதிலும் மழையையும் பொருட்படுத்தாமல் யாத்திரை மேற்கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடந்த 2 நாட்களாக கனமழை மற்றும் மூடு பனியை பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் மழை கோர்ட்டு அணிந்தபடி வந்து சாமி தரிசனம் செய்தார்கள்.
இந்தநிலையில் சபரிமலை பகுதியில் 3-வது நாளாக நேற்றும் மழை பெய்தது. மேலும் அருகில் உள்ளவர்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமும் பயங்கரமாக இருந்தது. இருந்தபோதிலும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். ஆனால் மற்ற நாட்களை விட வெகுவாக குறைந்த அளவிலேயே பக்தர்கள் வருகை இருந்தது. சபரிமலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதே பக்தர்கள் வருகை குறைவாக இருப்பதற்கு காரணம் என்று கூறுப்படுகிறது. பக்தர்கள் வருகை குறைவாக இருந்ததால் சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டநெரிசல் இல்லை.