சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று காலை நடை திறந்த 4 மணி நேரத்திற்குள் 26 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் கடந்த சில தினங்களாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. முதல் 5 நாட்களில் சராசரியாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். பின்னர் பக்தர்கள் தொடர்ந்து அதிகரித்தது.
இதற்கிடையே கடந்த 22-ம் தேதி முதல் தினமும் சராசரியாக 85 ஆயிரத்திற்கும் அதிகமாக பக்தர்கள் வருகை தந்தனர். தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் சில தினங்களாக அதையும் தாண்டி பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
18-ம் படியில் உடனுக்குடன் பக்தர்கள் ஏற்றப்பட்டு வருவதால் நீண்ட நேரம் காத்திருக்காமல் அனைவருக்கும் தரிசனம் கிடைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது. 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும்போது சரங்குத்தி வரை பக்தர்கள் காத்திருந்தனர். நடை திறந்த 4 மணி நேரத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதனால் பம்பை, சரங்குத்தி, மரக்கூட்டம் ஆகிய பகுதிகளில் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.