திருவனந்தபுரம், சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவை 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ம் தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர்.
பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி சாமி தரிசனம் செய்வதற்காக தேவசம்போர்டு இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தி இருக்கிறது. அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் மூலமாக 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அது மட்டுமின்றி குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு சன்னிதானத்தில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது மட்டும் நடைப்பந்தலில் கூட்டமாக இருக்கிறது.
மற்ற நேரங்களில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்காமல் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் நேரத்திலும் பக்தர்கள் பதினெட்டாம் படியில் ஏற அனுமதிக்கப்படுவதால் பதினெட்டாம்படி உள்ளிட்ட சன்னிதான பகுதியில் கூட்ட நெரிசல் என்பது இல்லை.
மேலும் ஒவ்வொரு நாளும் பக்தர்களின் வருகை அதிகரித்தபடி இருக்கிறது. நேற்று காலை சபரிமலை பகுதியில் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத் தாமல் பக்தர்கள் மலையேறிச் சென்றனர். மேலும் பதினெட்டாம் படி ஏறுவதற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும் கொட்டும் மழையில் நனைந்தபடி நின்றனர்.
இந்த நிலையில் சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவை 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் அதற்கு குறைவாகவே தினமும் பக்தர்கள் வருகிறார்கள். ஸ்பாட் புக்கிங் முறையில் தற்போது வரை அதிகபட்சமாக ஒரு நாளில் 5,982 பேரே பதிவு செய்து சன்னிதானத்துக்கு சென்றிருக்கிறார்கள்.
பதினெட்டாம்படியில் பக்தர்களை விரைவாக ஏறச் செய்தல், தரிசன நேரத்தை நீட்டித்தல் போன்ற நடவடிக்கைகளால் பக்தர்கள் நெரிசலில்லாத சுமூகமாக தரிசனத்தை பெற முடிந்த போதிலும், பக்தர்களின் வருகை எதிர் பார்த்த அளவுக்கு இல்லை.
இதன் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதன் மூலம் கிடைக்கும் வருவாய் பாதித்திருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும் அரவணை மற்றும் அப்பம் உள்ளிட்ட பிரசாத விற்பனையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என தெரிகிறது.
இந்த காரணங்களுக்காக பக்தர்களின் வருகையை அதிகப்படுத்த ஆன்லைன் முன்பதிவை 80 ஆயிரமாக அதிகரிக்கவும், ஸ்பாட் புக்கிங்கை தொடர்ந்து 10 ஆயிரமாக தொடரவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது ஓரிரு நாளில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.