சபரிமலை, சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. வாண வேடிக்கை மற்றும் பக்தர்களின் கோஷத்துடன் நடை திறக்கப்பட்டது. இந்த நிகழ்வைக் காண 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
கேரளத்தின் பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதந்தோறும் நடை திறக்கப்படும் குறிப்பிட்ட சில நாள்களில் நாடெங்கும் இருந்து பக்தர்கள் வந்து தரிசித்து செல்வது வழக்கம். கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி (நவ. 16) தொடங்கும் மண்டல பூஜை மற்றும் சிறிய இடைவெளியைத் தொடர்ந்து மகரவிளக்கு யாத்திரை சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரள்வர்.
கூட்டநெரிசலைத் தடுக்க நிகழாண்டு தினசரி இணைய வழியில் பதிவு செய்த 80,000 பக்தர்களுக்கும் நேரடியாக வரும் 10,000 பக்தர்களுக்கும் மட்டுமே அனுமதியளிக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை கேரள அரசுடன் இணைந்து திருவாங்கூர் தேவஸ்வம் செய்து வருகிறது. மண்டல பூஜை வரும் டிசம்பர் 26ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை வரும் ஜனவரி 14ஆம் தேதியுடம் நடைபெற உள்ளது.