சபரிமலையில் ரோப்வே திட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த பணிகளை 2027 சீசனுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெற உள்ளது.
பம்பை அடிவாரத்தில் இருக்கு சபரிமலை சன்னிதானத்துக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்காக 2.7 கிலோமீட்டர் நீளமுள்ள ரோப்வே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான இறுதிக்கட்ட கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
அதில் வனம், வருவாய், தேவசம் துறைகளின் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் ரோப்வே திட்டம் குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் அந்த பணிகளை விரைவில் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பது மற்றும் வனப்பகுதியில் கட்டுமான பணிகளை எளிதாக்குவது உள்ளிட்டவைகளை நோக்கமாக கொண்டு ரோப்வே பணிகளை மாற்றி புதிய அம்சங்களுடன் மேற்கொள்ளப்பட உள்ளன. ரோப்வே-க்கான கோபுரங்கள் கட்டுமானத்தின் போது வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதை குறைக்க அவை சபரிமலை பாதைக்கு அருகில் இடமாற்றம் செய்யப்படுகிறது. கோபுரங்களின் உயரம் 30 முதல் 40 மீட்டரில் இருந்து, 40முதல் 60 மீட்டராக அதிகரிக்கப்படுகிறது.
மேலும் கோபுரங்களின எண்ணிக்கை 7-ல் இருந்து 5-ஆக குறைக்கப்படுகிறது. அது மட்டுமின்றி ரோப்வே திட்டத்துக்கு வெட்டப்பட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை 300-ல் இருந்து 80 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. ரோப்வே பணிகளை விரைவில் தொடங்குவதற்கு ஏதுவாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வன நிலம் ஒப்படைக்கப்படுகிறது. அந்த நிலத்துக்கு பதிலாக கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா கட்டிலப்பாரா, செந்தூரனி வன விலங்கு சரணாலயத்தில் உள்ள வருவாய் நிலம் வனத்துறைக்கு மாற்றப்படுகிறது.
அதில் 9 ஹெக்டேர் வருவாய் நிலம், காடுகளை வளர்ப்பதற்காக வனத்துறைக்கு ஒதுக்கப்படும். நடப்பு ஆண்டு சபரிமலை சீசன் முடிவடைவதற்குள் ரோப்வே திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட தேவசம் துறை திட்டமிட்டுள்ளது. அதற்கு தகுந்தாற்போல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2027-ம் ஆண்டு சபரிமலை சீசனுக்குள் ரோப்-வே இயக்கப்பட வேண்டும் என்ற இலக்குடன் இந்த பணி தொடங்கப்பட இருக்கிறது.