திருவனந்தபுரம், ஜூலை. 24- சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆகஸ்ட் 10-ம் தேதி நிறை புத்தரிசி விழா நடைபெறுகிறது.
விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கவும் வேண்டி நிறை புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி அதிகாலை 5.45 முதல் 6.15 மணிக்குள் முதல் போக சாகுபடியில் விளைந்து அறுவடை செய்த நெற்கதிா்களை சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறைக்குள் எடுத்து செல்லப்பட்டு வழிபட்ட பின் சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு அவரது மகன் பிரம்மதத்தன், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஆகியோா் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்குவர்.
இந்த முறை சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள பூங்காவனத்தில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிா்கள் நிறை புத்தரிசிக்கு வைக்கப்படுகின்றன. நிறை புத்தரிசி பூஜைக்காக கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அச்சன் கோயிலில் இருந்தும், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் இருந்தும் நெற்கதிா்கள் சேகரித்து ஆண்டுதோறும் திருவிதாங்கூா் தேவஸ்தான அதிகாரிகள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எடுத்து செல்வாா்கள்.
இந்த நெற்கதிா்கள் வீடுகளில் வைத்திருந்தால் அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது நம்பிக்கை. நிறை புத்தரிசிக்காக ஆகஸ்ட் 9-ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு மறுநாள் ஆகஸ்ட் 10-ம் தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
தொடா்ந்து, ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடை திறக்கப்படும். திருவோணம் திருவிழாவுக்காக ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். ஆகஸ்ட் மாதம் 3 முறை கோவில் நடை திறந்து மூடப்படுவதாக சபரிமலை மக்கள் தொடா்பு அலுவலா் சுனில் அருமானூர் தெரிவித்துள்ளார்.