திருப்பதி, நவ. 05- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தரிசன டிக்கெட் வரும் 10-ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படவுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அடுத்த மாதம் 23-ம் தேதி முதல் ஜனவரி 1-ம தேதி வரை நடைபெற உள்ளது. ஏகாதசியையொட்டி 10 நாட்களுக்கு வைகுண்ட வாசல் வழியாக பக்தர்களை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக 10 நாட்களில் 6.70 லட்சம் தரிசன டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. அதன்படி வருகிற 10-ம் தேதி 2.25 லட்சம் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
இதே போல் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 20,000 டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகிறது. இதில் டிக்கெட் பெற விரும்பும் பக்தர்கள் ரூ.10 ஆயிரத்துடன் ரூ. 300 சிறப்பு தரிசனம் டிக்கெட் டோக்கன் பெற்று தரிசனம் செய்து கொள்ளலாம்.
மேலும் வைகுண்ட ஏகாதசி நாட்களில் அடுத்த மாதம் 22-ம் தேதி முதல் திருப்பதியில் 9 மையங்களில் 100-க்கும் மேற்பட்ட கவுண்ட்டர்கள் மூலம் 4.25 லட்சம் நேர ஒதுக்கீட்டு தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளது.
வைகுண்ட ஏகாதசி நாட்களில் ஆர்ஜித சேவைகள், கை குழந்தையுடன் வரும் பெற்றோர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.